ஜூட் சமந்த
மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர், கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சோகமான சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நாத்தாண்டியா – 80 ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரியகே மலிந்து தனஞ்சய (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நாத்தாண்டியா தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவராவார்.
சம்பவத்தன்று மாலை தனது நண்பர்கள் குழுவினருடன் மாரவில கடற்கரைக்கு நீராடச் சென்றபோது, எதிர்பாராத விதமாக உருவான பலத்த அலையினால் அவர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பயனாக, அன்றைய தினம் இரவு 7.00 மணியளவில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. எனினும், மீட்கப்பட்ட போதே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மாணவரின் உடல் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


