இலங்கையில் தினமும் 15 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகுவதாகவும், சுமார் மூன்று பேர் இந்நோயால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெரும இதனை தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கையில் 19,457 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதில் 5,477 பேர் (28%) மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்.
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் குணப்படுத்த முடியும் என்றாலும், 30% நோயாளிகள் தாமதமாக கண்டறியப்படுவதால் குணப்படுத்துவது கடினமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் ஆண்டுதோறும் 15,245 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும், இதில் 798 பேர் மார்பகப் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை முன்னிட்டு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னெடுக்கும் வகையில், ஒக்டோபர் 11 அன்று ஹெவ்லொக் சிட்டியில் விசேட நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.