மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் உற்பத்தி, கடத்தல் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மாத்திரமே கருத்திற் கொள்ளவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்குச் சுமையளிக்காத வகையில், மின்சாரக் கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பில் ஆணைக்குழு முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை முன்மொழிந்துள்ளது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போதும், நிலக்கரி இறக்குமதியின் போது ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவினங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைகளின் போதும் பின்வரும் விடயங்களை மின்சாரக் கட்டணத்தில் உள்ளடக்காதிருக்க ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது:
- நிலக்கரி விநியோகச் சிக்கல்கள் அல்லது தரக்குறைபாடுகள் காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகள்.
- மின்சார சபையினால் முன்வைக்கப்படும் ஏனைய நியாயமற்ற செலவினங்கள்.
நிலக்கரியின் தரம் மற்றும் ஏனைய நிர்வாக ரீதியான குறைபாடுகளால் ஏற்படும் நட்டங்களை நுகர்வோர் மீது சுமத்த முடியாது என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் உண்மையான மற்றும் அவசியமான செலவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எதிர்கால மின்சாரக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


