ஜூட் சமந்த
‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சிலாபம் பொது வைத்தியசாலை, மீண்டும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி சிலாபம் நகரம் பாரிய வெள்ளப்பெருக்குக்கு உள்ளானது. இதன்போது நகரிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலையும் பல அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கியது. இதன் காரணமாக, வைத்தியசாலையின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நோயாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளர்களும் ஏனைய வைத்தியசாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்டனர்.
புத்தளம் மாவட்டத்தின் மிக முக்கியமான வைத்தியசாலையாக சிலாபம் பொது வைத்தியசாலை விளங்குகின்றது. மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சை தேவைப்படும் நோயாளர்கள் அனைவரும் இந்த வைத்தியசாலைக்கே மாற்றப்படுவது வழக்கம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையம், வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றாக முடங்கியிருந்தது.
வைத்தியசாலை ஊழியர்கள், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் வைத்தியசாலையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடிந்ததாக பணிப்பாளர் சுமித் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலை மீண்டும் திறக்கப்பட்டமை குறித்து பணிப்பாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
ஒரு மாதத்திற்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர் வைத்தியசாலை மீண்டும் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. சூறாவளி முடிவடைந்த சில நாட்களிலேயே வெளிநோயாளர் பிரிவு (OPD), ஆரம்ப பராமரிப்புப் பிரிவு மற்றும் கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட்டன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு சத்திரசிகிச்சை கூடங்கள் மற்றும் ஏனைய பரிசோதனை கூடங்கள் தற்போது சீரமைக்கப்பட்டு, அனைத்துப் பிரிவுகளும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் சேதமடைந்த சி.டி. ஸ்கேன் (CT Scan) இயந்திரம் தற்போது திருத்தப்பட்டு வருகின்றது, அது இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும்.
வைத்தியசாலையில் தற்போது எவ்விதமான மருந்துத் தட்டுப்பாடும் இல்லை என்பதையும் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு மருந்தையும் நோயாளர்களுக்கு வழங்கத் தேவையான வசதிகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி மீண்டும் சிலாபம் பொது வைத்தியசாலையின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




