சீனாவில் உருவான கோவிட் வைரஸ் காரணமாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது அங்கு எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் உலகளவில் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து தற்போது தான் பல நாடுகள் மீண்டு வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி ( Human MetaPneumo Virus) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுழையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிகிறது.
இந்த வைரஸ் பரவலை பரவக்கூடிய தொற்று நோயாக சீனா சுகாதாரத்துறையினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் , மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது., பொதுவாக சுவாசப்பாதை மற்றும் தொண்டையில் தான் தொற்றை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும். இந்த வைரஸ் காரணமாக 3 முதல் 6 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். அதேநேரத்தில் வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து இது மாறுபடும்.
தடுப்பது எப்படி
எச்எம்பிவி வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கைகளை சோப் மற்றும் தண்ணீர் மூலம் 20 நொடிகள் கழுவ வேண்டும். கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடக்கூடாது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கூடாது. வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.
தடுப்பூசி
தற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க எந்த சிகிச்சையும் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. சாதாரணமாக அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. இப்பிரச்னை உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
தினமலர் – இந்திய ஊடக அறிக்கை