அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் வரி மற்றும் செலவு மசோதாவை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த மசோதாவுக்கு தமது எதிர்ப்பை அவர் பதிவு செய்து வருகிறார்.
இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் இதை எலான் மஸ்க் எதிர்த்துள்ளார். இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த அவர், வரலாற்றில் மிக பெரிய கடன் அதிகரிப்புக்கு இந்த மசோதா வழி வகுக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பைத்தியக்காரத்தனமான இந்த மசோதா நிறைவேறினால் புதிய கட்சியை தொடங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார். இந் நிலையில் மஸ்கின் மிரட்டலுக்கு அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தமது சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மானியங்கள் நிறுத்தப்பட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவுக்கு திரும்புவார் என்றார்.
அமெரிக்க அரசிடம் இருந்து மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா தலைமை அதிகாரி அநேகமாக தென்னாப்பிரிக்காவே திரும்புவார். நான் அதிபராக என்னை வலுவாக ஆதரித்ததற்கு முன்பே மின்சார வாகன ஆணையை கடுமையாக எதிர்த்தவன். இதை மஸ்க் நன்கு அறிவார்.
இனி ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார்கள் உற்பத்தி இருக்காது. மின்சார கார்கள் பரவாயில்லை. ஆனால் எல்லாரும் ஒன்றாவது வைத்து இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் டிரம்ப் கூறி உள்ளார்.
தொழிலதிபரான எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். அதை குறிப்பிடும் வகையிலே தான் அவர் தென்னாப்பிரிக்கா சென்று விடுவார் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.