- கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபரீதம்: மீன் தொட்டியில் விழுந்து 1 வயது பெண் குழந்தை பலி!
- உன்னோடுதான் இருக்கிறாள் என நினைத்த தாய்: உடப்புவையில் தாய்மாரை பதற வைத்த கோரச் சம்பவம்!
- வீட்டின் முன் இருந்த மீன் தொட்டி எமனாக மாறிய சோகம்: புத்தளம் உடப்புவையில் கண்ணீர்க் குரல்!
ஜுட் சமந்த
உடப்புவை: ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுக்க ஆறாத வடுக்களைத் தந்துவிடும் என்பதற்கு சான்றாக, உடப்புவை பெரியபாடு பகுதியில் ஒரு வயதுக் குழந்தையின் உயிர் பிரிந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரியபாடு பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றில், தந்தை வழமைபோல அன்றைய தினம் வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் தாயும் அவரது ஒரு வயது நான்கு மாதமேயான கைக்குழந்தையான தினிதி செனாயாவும் மட்டுமே இருந்துள்ளனர்.
வீட்டு வேலைகளில் தாய் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில், தன் செல்லக் குழந்தை தன்னுடனேயே பாதுகாப்பாக நடமாடிக் கொண்டிருப்பதாக அவர் கருதியுள்ளார்.
சிறுது நேரம் கழித்து குழந்தை தன்னுடல் இல்லை என்பதை உணர்ந்த தாய், வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பதறியடித்துக் கொண்டு தேடத் தொடங்கியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், வீட்டின் முன்பகுதிக்கு வந்து பார்த்த தாய்க்கு நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் முன்னால் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் குழந்தை அசைவற்று கிடந்ததைக் கண்டு அலறியடித்தபடி குழந்தையை மீட்டு, உடனடியாக கொத்தந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அந்தப் பிஞ்சு உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் உடப்புவை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


