வடக்கின் நீலங்களின் 14வது சமர் கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் அமோக வெற்றி பெற்றது.
வடக்கு நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்குமிடையிலான 14வது நீலங்களின் சமர் கிரிக்கெட் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது.
நேற்றைய முதல் நாள் போட்டியில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 134 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி முதல் இனிங்சில் 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இரண்டாவது நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 169 ஓட்டங்களை பெற்று, கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கு வெற்றி இலக்காக 182 ஓட்டங்கள் நிர்ணயித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 48.3 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.
இது வரை நடைபெற்ற 14 வடக்கின் நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 போட்டிகளிலும், கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 04 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 05போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
14வது வடக்கின் நீலங்களின் சமர் தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக இந்துக்கல்லூரி அணியின் வீரர் கே.கரிசாந்தன் தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரி அணியின் வீரர் ஜெ.மதுஷன் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி அணி வீரர் என். சாருஜன் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் ஆட்டநாயகனாக மத்திய கல்லூரி அணி வீரர் ஜீ.கெளசிகன் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

