ரமலான் காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வசதியாக வேலை நேரங்களை (Work Shifts) ஒழுங்குபடுத்தி வழங்குமாறு அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபைகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ரமலான் காலம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதால், அந்த காலப்பகுதியில் முஸ்லிம் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட ஏதுவாக வேலை நேரங்களை அமைத்துக்கொடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் விசேட விடுமுறைகளை அனுமதிக்குமாறும் அரச நிர்வாக அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ரமலான் பண்டிகை முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், அரச சேவை, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சபைகளில் பணியாற்றும் தகுதியுள்ள முஸ்லிம் அதிகாரிகளுக்கு பண்டிகை முற்பணத்தை (Festival Advance) வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அரச நிர்வாக அமைச்சு மேலதிகமாக அறிவுறுத்தியுள்ளது.



