எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி
மக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கான அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள் என்பவற்றின் தலைவர்கள் எதிர்நோக்கும் உள்ளக ரீதியான சவால்களில் ஒன்று “அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்” என்ற எதிர்பார்ப்புடன் சிலர் தங்களுக்குள் இருப்பதாகும்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல என்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் காலம் தொட்டு இன்றுவரை பார்த்து வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. தனி நபர் செல்வாக்கை விட கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகமென்பதால் அரசியல் முகவரி இழந்தவர்களும் அடைக்கலம் தேடும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது.
மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்து பல சவால்கள், உயிரச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பங்களிலும் தனது நேசத்துக்குரியவர்கள் தனக்கு துரோகம் செய்த போதும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் அரச ஆதரவோடு அதிகாரங்களைப்பெற்று முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக வந்த போதும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்தக்கட்சிக்கும் பல விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்.
இவ்வாறான சவாலான சந்தர்ப்பங்களில் தலைமைக்கு பக்க பலமாக தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் இருந்தார் என்பதாலும், ரவூப் ஹக்கீமிடம் இருக்கும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணங்கள், விவேகம், மும்மொழி தேர்ச்சி, சிறந்த அணுகுமுறை, சட்டஅறிவு போன்ற ஆளுமைகளை தனக்குள் வைத்திருப்பதைக்கூட இருந்து கண்காணித்ததன் காரணமாக தனக்குப்பின் இக்கட்சியை வழிநடாத்த சிறந்த தலைவராக பல சந்தர்ப்பங்களில் அஷ்ரப் அவர்களால் ரவூப் ஹக்கீம் அடையாளப்படுத்தப்பட்டார் என்பது உண்மை.
தலைவர் அஷ்ரப் மறைந்ததன் பின்னர் தலைமைத்துவப் போட்டி கட்சிக்குள் ஏற்பட்ட போது தான், தான் தலைவர் என சிலர் கோசமெழுப்பி தலைமைத்துவத்தை அடையமுயற்சித்த போது அவை வெற்றியளிக்கவில்லை.
மாறாக, மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்தெடுக்கப்பட்ட போராளிகளால் மர்ஹும் தலைவரின் விருப்பப்படி தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
அன்று தொடக்கம் இன்றுவரை தலைமைத்துவ சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு வருகிறார். தலைமைத்துவ போட்டியினால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சிலர் அரச ஆதரவோடு பிரிந்து தனிக்கட்சி அமைத்து தங்களை தலைவர்களாகக்காட்டிக் கொண்டாலும் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்குமான மௌசு குறைந்தபாடில்லை.
பல தடவைகள் பலரும் இக்கட்சிக்குள்ளிருந்து கொண்டும் வெளியிலிருந்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெற்றுக்கோசங்களை எழுப்பிய போதல்லாம் கட்சியின் போராளிகளாலும் ஆதரவாளர்களாலும் தலைமைத்துவம் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது எதார்தமான விடயமாகும்.
தேர்தல்களில் தோல்வியடையாது தொடராக மக்கள் ஆதரவோடு வலம் வரும் ரவூப் ஹக்கீமைத்தோற்கடிக்க காலத்திற்கு காலம் அரச அனுசரணையில் பலர் முயற்சித்து தோல்வி கண்ட நிலையில், கடந்த பாராளுமன்றத்தேர்தலில் அனுர அலையில் ரவூப் ஹக்கீமை கண்டியில் மூழ்கடித்து விடலாம் என எதிரிகளை விட கட்சிக்குள்ளிருக்கும் துரோகிகளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட துரோகிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டவேளையில் இறை உதவியோடு மக்களின் ஆதரவோடு வெற்றிவாகை சூடினார்.
தற்போது உள்ளூராட்சித்தேர்தல் முடிந்த கையோடு ஒரு சிலர் மீண்டும் வெற்றுக்கோசங்களை எழுப்புவதை முகநூல்களில் காணலாம். அது எவ்வாறிருக்கிறது என்றால் “ஆடு நனையிது என ஓநாய் அழுத” கதையாகத்தான் இருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று சுகயீனப்பட்டாரே தவிற, பலவீனப்படவில்லை. இறை உதவியோடு பலமான தலைவராக தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தேசியத்தில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற போது அங்கு நினைவு படுத்தப்படும் நாமம் ரவூப் ஹக்கீம் என்ற நாமம்தான். தேசிய முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கும் தலைவர் என்றால் ரவூப் ஹக்கீம் என்பதில் கடந்தகால நிகழ்வுகள் சாட்சியங்களாக இருக்கின்றது.
ரவூப் ஹக்கீமை எதிர்க்கும் துரோகிகளை விட எதிரிகள் தற்போதைய சூழலில் இலங்கையின் அரசியலில் ரவூப் ஹக்கீமின் அவசியத்தைப்புரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவே, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்காக ரவூப் ஹக்கீமை அன்று தொடக்கம் இன்றுவரை எதிர்க்கிறார்கள். இவ்வாறானவர்களின் எதிர்ப்பும் வெற்றுக்கோசங்களும் ரவூப் ஹக்கீமை பலப்படுத்துமே தவிர, ஒரு போதும் பலவீனப்படுத்தாது.
கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள், நடுநிலையானவர்கள், சமூக சிந்தனை கொண்ட புத்திஜீவிகளும் தற்கால அரசியலில் ரவூப் ஹக்கீமின் வகிபாகத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது.