‘தமிழன் பத்திரிகையின் செவ்வாய்க்கிழமை (04) ஆசிரியர் தலையங்கம்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் தெரிவித்துள்ளார்..
சில மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களை அவதானிக்கும்போது, குறிப்பாக சிறுவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்று கூறும் அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
“இதுபோன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன, மேலும் அரச புலனாய்வுத்துறை மற்றும் இராணுவப் புலனாய்வு இரண்டும் இந்த நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் இனவெறியும் பரவ அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஆனந்த விஜேபால.
இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அறுகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்கள் தொடர்பான அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியைத் ஏற்படுத்தியுள்ளது. கண்ணியமிக்க புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியிருக்கும் தறுவாயில் அரசாங்கத்தின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது அந்த மக்கள் மத்தியில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் இஸ்லாமிய மக்கள் கணிசமான ஆதரவை இந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூரவேண்டியுள்ளது. அப்படியாக ஆதரவை வழங்கினாலும் தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவர் இல்லை என்ற ஆதங்கம் இருக்கின்றபோதிலும் அது இன ரீதியாக பார்க்கப்படக் கூடாது என்று அமைதிகாத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது இப்போது அபாண்டம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் மீது இப்போது அமைதியான அடக்குமுறையொன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தரமான இஸ்லாமிய நூல்களையும் சுங்கத் திணைகளத்தில் தீவிர பரிசோதனைக்குட்படுத்தியே அனுப்புகின்றனர். கிழக்கில் அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் இப்போது தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புகிறார்கள் என்ற தகவலை அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து புலனாய்வுத்துறை அறிக்கை கிடைக்குமாயின் அது தொடர்பில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் பேசுவதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். அதைவிடுத்து இதை பகிரங்கமாக கூறுவது, தென்னிலங்கையில் இஸ்லாமியர்கள் தொடர்பில் மாற்றுச் சிந்தனைக்கு வழிவகுக்கும். ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த நிலைமையிலிருந்து மீண்டெழும் முஸ்லிம் சமூகம் மீது இப்படியான குத்துமதிப்பு கதைகள் கூறப்படுவது நியாயமானதல்ல.”இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தொடர்பில் நியாயப்படுத்தலில் கூட அவர்கள் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை.
இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும் இதே புலனாய்வுத்துறைதான், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் பலவற்றின் பின்னணியில் இருந்ததாகவும் விமர்சனங்கள் உள்ளன.
அதுமட்டுமல்ல பல சம்பவங்கள் தொடர்பில் அவர்கள் சரியான தகவல்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கவில்லையென்ற சாடல்களும் உள்ளன. அதனால் இப்போது இந்த தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதான செய்தி குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்து அரசு உடனடியாக ஆராயவேண்டும்.
குறிப்பாக இந்த நோன்பு காலத்தில் விசேட பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் சூழ்நிலை இருக்கிறது. அதேபோல அதையொட்டிய நிகழ்வுகளும் நாடாளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.
அப்படியான நிலையில் இஸ்லாமியர்கள் மீது புதிய லேபல் ஒன்றை இடாமல் பொறுப்புடன் செயற்படவேண்டியது அரசின் பொறுப்பும் கடமையாகிறது. அப்படியே சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இருப்பதாக அரசாங்கம் கருதுமானால் மார்க்க அறிஞர்கள், அந்த சமூகத்தின் புத்திஜீவிகள், அரசியல்வாதிகளை அழைத்துப்பேசி இந்த விடயத்தினை ஆராயும் பொறுப்பை அவர்களிடம் விடவேண்டும். எடுத்த எடுப்பில் ஒரு தீர்மானத்திற்கு வந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் சந்தேகக் கண்கொண்டு நோக்க வைத்துவிடக்கூடாது.