முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசாங்கம் தற்போது அந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயற்படுத்த முனைவது வரவேற்கத்தக்கது. இதனையே கர்மவினை என்பார்கள். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய கல்வி சீர்த்திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மறுசீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டன. இருப்பினும் அதனை செயற்படுத்த முடியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டாண்டு கால பதவியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நவீன தொழில் உலகினை கருத்திற் கொண்டு கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ஆகியோர் தலைமையில் குழுவை நியமித்து மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போதைய கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தை தோற்றுவித்தார்கள். இதனால் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட கல்வி மறுசீரமைப்பு பணிகளை இந்த அரசாங்கம் எவ்வித மாற்றமுமில்லாமல் செயற்படுத்த தீர்மானித்துள்ளது.
இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும். சிறந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் 7 முதல் 9 ஆம் தரம், 9 முதல் 11 தரம், 11 முதல் 13 ஆம் தரம் என்ற அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 தரங்களில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த அடிப்படையில் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.
பாட தெரிவுகளின் போது விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். வரலாறு மற்றும் அழகியற் கலை பாடங்களை இரண்டாம் நிலையாக்காமல் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் அரசாங்கம் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்றார்.