மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது.
மெக்சிகோ நாட்டில் ‘ஜலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல்’ என்ற பெயரில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. கடந்த காலங்களில் இக்கும்பல் மெக்சிகோ ராணுவ வீரர்களைக் கொன்றது மற்றும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தது. இக்கும்பலின் தலைவனான நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ், ‘எல் மென்சோ’ என்று அழைக்கப்பட்டு வந்தான்.
அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 125 கோடி ரூபாய் வரை பரிசு அறிவித்திருந்தது. உலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த இவனைப் பிடிக்க மெக்சிகோ மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மெக்சிகோ சிறப்புப் படையினர் மற்றும் அமெரிக்க ராணுவக் குழுவினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எல் மென்சோ மற்றும் அவனது கூட்டாளிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தேசிய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இவனது மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவின் ஜலிஸ்கோ, மிகோகன் உள்ளிட்ட 8 மாநிலங்களில் போதை கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் மற்றும் லாரிகளுக்குத் தீ வைக்கப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் பேசுகையில், ‘நாட்டின் பாதுகாப்பைப் பேணவும் பொதுமக்களின் அமைதியை நிலைநாட்டவும் ராணுவத்தினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதை கும்பலின் அச்சுறுத்தல்களை ஒடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது‘ என்றார்.


