ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்து இருக்கும் மெட்டா நிறுவனம் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக நேற்று மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியை பயன்படுத்தி ட்விட்டரை போல தகவல்கள், லிங்குகளை பரிமாற்றிக் கொள்ள முடியும்.
இந்த செயலி பயன்பாட்டிற்கு வந்த ஒரு நாளில் 3 கோடிக்கும் அதிகமானோர் பயனாளிகளாக இணைந்துள்ளனர். இந்த நிலையில் காப்புரிமை விதியை மீறி செயல்பட்டதாக த்ரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் மஸ்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் பைரோ என்பவர் ட்விட்டரின் வர்த்தகம் உட்பட நிறுவனத்தின் ரகசிய தகவல்களை அறிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
அதுமட்டுமின்றி அறிவு சார்ந்த காப்புரிமை விதிகளை மீறி இருப்பதாக கூறி இருக்கும் அவர், ட்விட்டரின் வர்த்தக ரகசியங்களை பயன்படுத்தினால் வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதனிடையே எலான் மஸ்கின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மெட்டா நிறுவனம், த்ரெட்ஸ் பொறியாளர்களில் ஒருவர்கூட ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றியவர் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.