வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து ‘போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு’ என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (09.09.2025) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆளுநர் தனது உரையில், வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணிகளையும் கருத்திலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது.
கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே?
அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் – ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன. அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன், என்றார் ஆளுநர்.
இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
