Wednesday, May 14, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsயாழ் நூலகம் தொடர்பில் மனம் திறந்த ஆளுநர்!

யாழ் நூலகம் தொடர்பில் மனம் திறந்த ஆளுநர்!

நூலகம் ஒன்று எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இன்று உங்கள் பாடசாலைக்கு நன்கொடையாக அமைத்து வழங்கப்பட்டுள்ள நூலகத்தை உரிய வகையில் பயன்படுத்தி உங்கள் கிராமத்துக்கும் – சமூகத்துக்கும் நற்பெயரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ‘மாணிக்கம் பூமணி ஞாபகார்த்த நூலகம்’ இன்று செவ்வாய்க்கிழமை (13.05.2025) திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ந.வில்லியம் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் சிறப்பு விருந்தினராகவும், தீவக வலய கல்விப் பணிப்பாளர் தி.ஞானசுந்தரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்து நினைவுக் கல்லையும் திரை நீக்கம் செய்தார்.

இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றன. இதன்போது ‘நெய்தலின் ஊற்று’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தை கட்டுவதற்கு அன்பளிப்புச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2021ஆம் ஆண்டு நூலகத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டு அண்ணளவாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபா செலவில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தனது பிரதம விருந்தினர் உரையில் ஆளுநர் தெரிவித்ததாவது,

இந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் கட்டுமானங்கள் எல்லாம் சீர்குலைந்துபோனது. இடப்பெயர்வுடன் பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றவர்கள் இன்று எமது கிராமமும், சமூகமும் முன்னேற வேண்டும் என்பதற்காக இத்தகைய அளப்பெரிய உதவியைச் செய்திருக்கின்றார்கள்.

நான் எல்லா இடங்களிலும் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறிவருகின்றேன். தலைமைத்துவம் எங்கு சரியாக இருக்கின்றதோ அந்த நிறுவனம் உயர்வை நோக்கிச் செல்லும். இது அரசாங்க நிறுவனத்துக்கு மாத்திரமல்ல தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

சில பாடசாலைகளின் அதிபர்கள் கணக்குகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையையுடன் நடந்துகொள்வதில்லை. அவ்வாறான அதிபர்களின் தலைமைத்துவக் குறைபாட்டால் அந்தப் பாடசாலைக்கு உதவிகளைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. அதனால் பாடசாலை பௌதீக ரீதியிலோ எந்தவொரு வகையிலுமோ வளர்ச்சியடைய முடியாத நிலைமை இருக்கின்றது. ஆனால் உங்கள் பாடசாலையின் அதிபர் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர் சமூகம் பல உதவிகளைச் செய்திருக்கின்றது. இதைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற வேண்டும்;.

பாடசாலைக்கான வகுப்பறையின் தேவை உள்ளிட்ட சில விடயங்களை அதிபர் கோரியிருந்தார். உங்களின் கல்வித் தரம் உயர்வதற்கு எங்களாலான முயற்சிகளைச் செய்வோம். அடுத்த ஆண்டிலாவது உங்களின் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு நாம் நிச்சயம் முயற்சிப்போம், என்றார் ஆளுநர்.

மேடை நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலையில் புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular