யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (18.09.2025) நடைபெற்றது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறானதொரு தனியான கூட்டத்தைக் கூட்டியமைக்காக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் சம காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதை எல்லோரும் அறிவீர்கள் எனத் தெரிவித்த ஆளுநர் குறிப்பாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி சகலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்றதொரு நவீனமயப்படுத்தல் வடக்கு மாகாணத்துக்கும் தேவைப்படுவதாகக் கோரிய ஆளுநர், ஏற்கனவே தூய்மை இலங்கை செயற்றிட்டத்தில் வடக்கில் 9 பேருந்து நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் நினைவுகூர்ந்தார்.
இதன் பின்னர் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தனது உரையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்தை தற்போதுள்ள நிலைமையை விடவும் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்புக்குழுவை தனித்தனியே அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழான ஒவ்வொரு துறைகளின் பிரச்சினையும் தனித்தனியே ஆராயப்பட்டன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வேலைத் திட்டங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டது. இதன்போது தீவுப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்காக விசேடமாக மேலதிக நிதியாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பயணிகள் கடற்போக்குவரத்து தொடர்பாகவும் ஆராயப்பட்டது. வீதி விபத்துக்கள், யாழ். மாவட்டத்தில் இயங்கும் சாரதி பயிற்சிப் பாடசாலைகள், புகையிரத திணைக்களம் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன. குறிப்பாக கடந்த காலங்களில் இயங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்குமாறு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதேவேளை, யாழ். நகரத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் மத்திய பேருந்து நிலையம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நகரின் நெருக்கடி காரணமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன் ஆகியோரும், கௌரவ தவிசாளர்கள், அமைச்சு அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

