தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்கு அமைய பாதீடு முன்வைக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கூறிய விடயங்கள் அனைத்தையும் மறந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமூக செலவீனங்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தலையில் எல்லையற்ற சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
மக்கள் ஆணையை முற்றுமுழுதாக அரசாங்கம் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வரலாற்று ரீதியான மற்றுமொரு தவறு நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதையிலேயே தற்போதைய அரசாங்கமும் பயணிப்பதாக சுட்டிக்காட்டினார்.
2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவோம் எனப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அதற்காகத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்று மீண்டும் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
2028 ஆம் ஆண்டு கடனை செலுத்துவது என்றால் பொருளாதார வளர்ச்சி உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
1975 ஆண்டு முதல் இதுவரை ஐ.எம்.எப் 75 நாடுகளில் செயற்படுத்திய திட்டங்களில் 59 சதவீதமானவை 2 ஆம் 3 ஆம் 4 ஆம் கடன்மறுசீரமைப்புக்கு செல்ல நேரிட்டதாகக் கூறினார்.
இது பாரதூரமான அழிவாக அமையும் என்றும் இதனை யாரும் வெளியில் சொல்வதில்லை எனவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடனை திருப்பிச் செலுத்தவும் முயற்சிக்கும் அரசாங்கம் எவ்வாறு அரச வருமானத்தை அதிகரிப்பது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவில்லை எனக் கூறினார்.
இது தொடர்பில் தற்போது அரசாங்கம் கூறும் புள்ளிவிபரங்கள் வெறுமனே கற்பனை விடயங்களாகவே தம்மால் பாரக்க முடியும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
எனவே அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேநேரம் மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர் கடந்த நாட்களில் வழங்கப்படாமல் இருக்கும் அந்த தொகையை வழங்குமாறு வலியுறுத்தினார்.