Thursday, November 21, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsரணிலின் மடியில் கொடுங்கோலன் சகாக்கள்!

ரணிலின் மடியில் கொடுங்கோலன் சகாக்கள்!

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (03) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “ஒரு இனத்தின் சார்பாகவே, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக இறுமாப்புப் பேசிய கோட்டாபய ராஜபக்ஷவின் சகாக்களைத் தோற்கடிக்க இத்தேர்தலைப் பயன்படுத்துங்கள்.

அன்புக்குரிய தாய்மார்களே, இளைஞர்களே, தந்தையர்களே மத குருமார்களே! சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த மாவட்டம் புத்தளம். எம்மிடையே வேறுபாடுகளைத் தோற்றுவிக்க ஒரு கொடுங்கோலன் ஆட்சிபீடம் ஏறினான். நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிய அவரை மக்கள் விரட்டியடித்தனர். இவரது சகாக்களோ ரணிலின் மடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

உணர்ச்சிவசப்பட்டு தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள். சீனா, வியட்நாம் நாடுகளில் நடப்பதை எண்ணிப்பாருங்கள். மதக்கடமைகளைச் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த காலத்தில், ஒருசில இளைஞர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானதால், பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை மறக்க முடியாது.

எந்த அனுபவமுமில்லாத தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால், கோட்டாவின் யுகமே மீண்டும் ஏற்படும். இந்தக் கட்சியின் செயற்குழுவிலுள்ள 28 பேரும் ஒரே இனத்தைச் சேர்ந்தோர்களே. இவர்களது மேலாதிக்க மனோபாவத்தைப் புரிந்துகொள்ள இதுவே போதும்.

ஆனால், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணண், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் எமது கட்சி எல்லாம் சஜித் பிரேமதாசவையை ஆதரிக்கின்றன.

கொழும்பிலுள்ள குப்பைகளை மட்டுமல்ல, இந்த ஆட்சி நீடித்தால் சிங்கப்பூரிலுள்ள குப்பைகளையும் இங்கேதான் கொட்டுவர்.

தபால்மூல வாக்களிப்பு வெற்றியை முன்னறிவிப்புச் செய்யும். எனவே, எமது வெற்றிக்கு வழிகாட்ட படித்த மக்கள் தாபால்மூல வாக்கைப் பயன்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular