அரகல போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 2022 மே 09 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார்.
பிரதமர் பதவி வெற்றிடமானால், ஜனாதிபதி அவரது அபிப்பிராயப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருக்கின்றாரோ அந்த பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. (அரசியலமைப்பின் உறுப்புரை 43(4))
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருப்பார் என்ற அதீத நம்பிக்கையில் பிரதமர் பதவியை ஏற்கும்படி அவருக்கு பல தடவை அழைப்பு விடுக்கிறார்.
அதற்கு சஜித் பிரேமதாசவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் வழிகாட்டுதலில் பல இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்த அவகாசம் முடிவடைகின்ற நிலையில், குறித்த பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஏற்கும்படி கோட்டாபய அழைப்பு விடுத்ததும் பிரதமர் பதவியை ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
2022 மே 12 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்கிறார் ரணில்.
ரணில் பிரதமரான பின்னரும் “கோட்டா கோ ஹோம்” கோஷம் உக்கிரமடைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறார்.
ஒரு ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைய முன்னர் வெற்றிடமானால், அரசியலமைப்பின் படி, எஞ்சியுள்ள காலத்துக்கு பதவி வகிப்பதற்கென பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களுள் இருந்து ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நியதி (உறுப்புரை 40(1)(a))
அவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி வெற்றிடமானதிலிருந்து ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். (உறுப்புரை 40(1)(b))
ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையான இடைப்பட்ட காலத்தில், நாட்டின் பிரதமரே பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும். (உறுப்புரை 40(1)(c))
இந்த 40(1)(c) எனும் உறுப்புரைக்கமைய 2022 ஜூலை 14 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகின்றார்.
2022 ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. வங்குரோத்து அடைந்த நாட்டை பொறுப்பேற்பதற்காக புதிய ஜனாதிபதி பதவிக்கு மூவர் தைரியமாக போட்டியிட்டனர்.
1) ரணில் விக்கிரமசிங்க
2) டளஸ் அழகப்பெரும
3) அநுர குமார திசாநாயக்க
வாக்கெடுப்பு முடிவில், ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும், அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்க, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகின்றார்.
இதுதான்ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகுவதற்காக நாட்டில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறை. இதுவே பின்பற்றப்படவும் வேண்டும்.
பிரதமர் பதிவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்ட அழைப்பைப் போல், அனுர குமரா திஸ்ஸநாயக்கவுக்கோ அல்லது டலஸ் அலகப்பெருமவுக்கோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.