பாதாள உலகக் குழுக்களின் நிழல் ராஜ்ஜியத்திற்கும், குற்றச் செயல்கள் மூலம் திரட்டப்படும் சட்டவிரோதப் பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பாதுகாப்புத் தரப்பினர் தங்களது அதிடிரடி நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, ‘ரத்கம விதுர’ என்று பரவலாக அறியப்படும் குற்றவாளியான புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்கவுக்குச் சொந்தமான பெருமளவிலான சொத்துக்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.
சுமார் 15 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட இந்த மாபெரும் சொத்துக் குவியல், பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணைகளின் பின்னரே தற்போது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. அரச அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்திய இந்த சொத்து வேட்டையின் பின்னணியில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சந்தேகநபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் தந்திரமாக, தனது பெயரில் எவ்வித சொத்துக்களையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்துச் சொத்துக்களையும் தனது தாயாரின் பெயரிலேயே கொள்வனவு செய்துள்ளார் என்பது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. தாயின் பெயரைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி, சட்ட விரோதப் பணத்தைச் சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்ற முயன்ற விதுரவின் திட்டம் தற்போது தவிடுபொடியாகியுள்ளது.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களின் பட்டியலை நோக்கும் போது, ரத்ம – தேவனிஹொட பகுதியில் உள்ள 13.72 பேர்ச்சஸ் நிலத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள சுமார் 600 இலட்சம் (6 கோடி) ரூபாய் பெறுமதியான சொகுசு மூன்று மாடிக் கட்டிடம் இதில் பிரதான இடத்தை வகிக்கின்றது. அத்துடன் நிற்காமல், அதே பகுதியில் அமைந்துள்ள சுமார் 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9.10 பேர்ச்சஸ் நிலமும், அதில் அரைகுறையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மற்றொரு மூன்று மாடிக் கட்டிடமும் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக, அதே தேவனிஹொட பகுதியில் 12.33 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்ட சுமார் 250 இலட்சம் ரூபாய் பெறுமதியான மற்றொரு காணியும், சுமார் 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிலப்பரப்பும் என மொத்தமாக 1500 இலட்சம் (15 கோடி) ரூபாய் பெறுமதியான அனைத்துச் சொத்துக்களும் தற்போது சட்டத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதாள உலகச் சட்டவிரோத வலையமைப்பை அடியோடு அறுக்க மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏனைய நபர்களுக்கும் ஒரு பலமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.


