- ராஜாங்கனை – மேல் கொத்மலை வான் கதவுகள் திறப்பு: கலாஓயா, கொத்மலை ஓயா கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
- பெருக்கெடுக்கும் நீர்: நொடிக்கு 7,884 கன அடி வெளியேற்றம் – வான் கதவுகள் திறக்கப்பட்டன!
- கனமழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆற்றுப்படுகை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதையடுத்து, நீர் வெளியேற்றம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மற்றும் குருநாகல் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் மொத்தமுள்ள 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவை நோக்கி ஆக்ரோஷமாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அதேவேளை, மலையகத்தின் மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளதால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று பெய்த அடைமழை காரணமாக அதிகாலை வரை இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (22) அதிகாலை நீர்மட்டம் சற்று சீரானதையடுத்து ஒரு வான் கதவு தானாகவே மூடிக்கொண்டதாக பொறியியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை வீழ்ச்சி தொடர்ந்து பதிவாகி வருவதால் எந்நேரமும் மேல் கொத்மலையின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.
இதனால் கலாஓயா மற்றும் கொத்மலை ஓயாவின் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ் உள்ள ஆற்றுப்படுகையின் இருமருங்கிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன மற்றும் நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


