இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ரோஹிங்கியா ஏதிலிகளின் நல்வாழ்வை கருத்திற் கொண்டு, சர்வதேச மனிதாபிமான கொள்கைகளை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
மியன்மாரில் நிலவும் கடுமையான வன்முறை காரணமாக அந்த மக்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அவர்களின் அவலநிலையை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த ஏதிலிகளை மீள்குடியேற்றக் கூடிய பொருத்தமானதும் பாதுகாப்பதுமான மூன்றாவது நாட்டை அடையாளம் காண்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து இலங்கை ஒத்துழைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஏதிலிகள் மனித கடத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருக்கலாம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கையை அண்மித்த பிராந்தியத்தின் ஊடாக ஐரோப்பாவில் உள்ள தங்களது இலக்கை நோக்கி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான அலுவலகமும் தற்போது இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா ஏதிலிகள் நேற்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த மியன்மார் ஏதிலிகள் 12 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறையினரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.