FIFA கிளப் உலகக் கோப்பை என்பது FIFA ஆல் நடத்தப்படும் வருடாந்த சர்வதேச கால்பந்து போட்டியாகும்.
இது FIFAவின் ஆறு கண்ட கூட்டமைப்புகளிலிருந்தும் (ஐரோப்பாவில் UEFA மற்றும் தென் அமெரிக்காவில் CONMEBOL போன்றவை) சாம்பியன் கிளப்புகளை ஒன்றிணைத்து உலகின் சிறந்த கிளப் அணியின் பட்டத்திற்காக போட்டியிடுகிறது.
அந்த வகையில் ‘கிளப்’ கால்பந்து உலக கோப்பை தொடரில் உலகப்புகழ் கிரிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். இவரது அணி, கிளப் அணிகளுக்கான ‘பிபா’ உலக கோப்பை தொடரில் (அமெரிக்கா, 2025, ஜூன் 14-ஜூலை 13) பங்கேற்க தகுதி பெறவில்லை.
இது கிரிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் (2008), ரியல் மாட்ரிட் (2014, 2016, 2017) அணிக்காக என 4 முறை கிளப் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்று கொடுத்துள்ள கிரிஸ்டியானோ ரொனால்டோ இம்முறை கிளப் உலக கோப்பை தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளமை அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கிளப் உலக தொடரில் பங்கேற்கும் 32 அணிகள், ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம்,’ என அறிவிக்க, ‘பிபா’ தயாராகி வருகிறது.
இதனால் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய, இன்டர் மிலன், ரியல் மாட்ரிட், அல் ஹிலால் (சவுதி அரேபியா) அணிகள் முயற்சி செய்து வருகின்றன. தவிர, மெஸ்சி விளையாடும் இன்டர் மயாமி அணியும், கிளப் உலக தொடருக்காக மட்டும், ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்தி வெளியாகி உள்ளன.