2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் மொத்த சுற்றுலா வருமானம் 1,122.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் 2025 இல் மட்டும் 354 மில்லியன் டொலர்கள் சுற்றுலா வருமானமாகப் பதிவாகியதன் மூலம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுற்றுலா வருமானம் ஒரு பில்லியன் டொலர் எல்லையை கடந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெறப்பட்ட 1,025.9 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 9.4% அதிகரிப்பைக் காட்டுவதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் மூன்று மாதங்களில் 722,276 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து சராசரியாக 1,553.83 டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 635,784 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து 1,025.9 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டது.
இதன்போது ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து சராசரியாக 1,613.59 டொலர் வருமானம் கிடைத்திருந்தது.
இதன்படி, 2025 முதல் காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலா வருமானம் ஆண்டு அடிப்படையில் உயர்ந்திருந்தாலும், ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து கிடைக்கும் சராசரி வருமானம் 2024ஐ விட சற்று குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.