வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை மாவட்ட அரசாங்கதிபர் பார்வையிட்டார்.
கடந்த 28ம் திகதி ஏற்பட்ட டித்வா புயல் தாக்கம் காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வான் கதவு திறந்து விடப்பட்டமையால் தாழ் நிலப்பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பெரியகுளம் போன்ற பகுதிகளில் பல ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இவற்றை ஆராயும் நோக்கில் மாவட்ட அரசாங்கதிபர் பெரியகுளம் பகுதிக்கு சென்று அழிவடைந்த நெல் வயல் நிலங்களை பார்வையிட்டார். அரசாங்க அதிபருடன் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் விவசாயிகள், ஏற்பட்ட அனர்த்தத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெறும் 45 நாட்களில், கடந்த 28-ம் திகதி ஏற்ப்பட்ட வெள்ளம், இரணைமடு குளத்தின் நீர் வடிந்துதோடும் பகுதிகளில் உள்ள பல விவசாயிகளின் நெற்செய்கை முற்று முழுதாக அழிவை ஏற்படுத்தியதாகவும், இதற்கான கொடுப்பனவுகள் முற்று முழுதாக விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும், தற்போதைய அரசாங்கம் எமக்கு ஏற்பட்ட அழிவுக்கான கொடுப்பனவை முற்றும் முழுதாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
குறித்த இழப்பீடு கிடைக்கப்பெறுமாயின் தொடர்ச்சியாக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை உருவாகும் எனவும், இல்லையேல் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.



