Thursday, May 22, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கின் மூலப்பொருட்கள் தெற்கிற்கு!

வடக்கின் மூலப்பொருட்கள் தெற்கிற்கு!

வடக்கிலிருந்து விவசாய உற்பத்திப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே தென்பகுதிக்குச் செல்கின்றன. அவற்றை முடிவுப்பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

யுனிடோ நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்குத் இதன்போது தெரியப்படுத்தப்பட்டத்து.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் மற்றும் மீன்பிடி இரண்டுமே மிக முக்கியமானவை என்றும் அவற்றை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதில் சவால்கள் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். விலைத் தளம்பலால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இதனால் அவர்கள் கால ஓட்டத்தில் விவசாய உற்பத்தியையே கைவிடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

சில சந்தர்ப்பங்களில் வடக்கு விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களின் விலையைவிட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர் எதிர்காலத்தில் இத்தகையை நிலைமையைத் தவிர்ப்பதற்காக வடக்கு மாகாணத்தில் எந்தக் காலத்தில் எந்த உற்பத்திப்பொருள் என்ன அளவில் உற்பத்தி செய்யப்படும் என்ற விவரக்கொத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும், அதனை அரசாங்கத்துக்கு வழங்குவதன் மூலம் இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு திட்டமிடுவதாகவும் தெரிவித்தார்.

போருக்கு முன்னர் வடக்கில் இயங்கிய சில உற்பத்தித் தொழிற்சாலைகளால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றிருந்தனர் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், தற்போது அத்தகைய நிலைமை இல்லை என்பதால் வேலை வாய்ப்பும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம் வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் ஆளுநர் தெரியப்படுத்தினார். முதலீட்டு வலயத்தில் அமையவுள்ள தொழிற்சாலைகள் தொடர்பிலும், அதற்கான ஆளணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் யுனிடோ நிறுவனத்தினர் கேட்டறிந்துகொண்டனர்.

அத்துடன் விவசாயிகளுக்கு, விவசாய உற்பத்திப்பொருட்களுக்கான சிறந்த தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் திட்டம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதாக யுனிடோ நிறுவனத்தினர் ஆளுநருக்கு தெரியப்படுத்தியதுடன், தொடர்ந்தும் வடக்கு மாகாணத்துடன் இணைந்திருப்பதாக யுனிடோ நிறுவனத்தினர் குறிப்பிட்டிருந்த நிலையில் அதனை ஆளுநர் வரவேற்றார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular