Friday, April 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் உருவாகியுள்ள புதிய பிரச்சினை!

வடக்கில் உருவாகியுள்ள புதிய பிரச்சினை!

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வட மாகாண ஆளுநரை இன்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடிய போதே வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளன. மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

இதேவேளை, மனநல பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான, தங்க வைப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என்று வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular