இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னார், வன்காலை பகுதி மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு (02) டிங்கி படகுகள், ஐந்து (05) சந்தேக நபர்கள் மற்றும் நூற்று இருபத்தொரு (121) கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
அதன்படி, 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் ரணவிக்ரம நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் பயணித்த இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும், குறித்த டிங்கிகளுக்குள் இருந்த நூற்று பத்தொன்பது (119) கிலோகிராம் ஐநூறு (500) கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 27 ஆம் திகதி மன்னார் வன்காலை பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல்களான புஸ்ஸதேவ மற்றும் கஜபா, மன்னார் காவல் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) சந்தேக நபர் இரண்டு (02) கிலோகிராம் முன்னூறு (300) கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட நூற்று இருபத்தொரு (121) கிலோகிராம் எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சா மொத்த மதிப்பு இருபத்தேழு (27) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 51 வயதுக்குட்பட்ட மாதம்பே மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், மன்னார் வன்காலை பகுதியில் சிக்கிய சந்தேக நபர், வன்காலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த, ஐந்து (05) சந்தேக நபர்கள், கேரள கஞ்சா தொகை மற்றும் இரண்டு (02) டிங்கிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வன்காலை காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.