கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி போலீசார், தர்மபுரம் போலீசார் இணைந்து புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவு உட்பட்ட பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டை வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், தமது பகுதியில் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும், இவர்கள் இங்கு குடியிருப்பது இதுவரையில் தமக்கு தெரியாது எனவும், இது தொடர்பாக கிராம சேவையாளருக்கும் எந்தவித பதிவுகளோ அல்லது விவரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தடையப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
