வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘கழிவிலிருந்து மின்சார உற்பத்தி’ (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோன் அவர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்துள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை (17.11.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆளுநர் வரவேற்றதோடு, மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக் கழிவகற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுச்சூழல் சமநிலை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மங்குரோவ் நடுகை ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் யோசனையையும் தூதுவர் முன்வைத்தார். மேலும், கொரியாவின் சர்வதேச சுகாதார அறக்கட்டளை (Korea Foundation for International Healthcare) ஊடாக இலங்கையில் 11 சுகாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதனுள் வடக்கு மாகாணமும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிக்காக கொய்கா (KOICA) திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டட வசதிகளுக்காக ஆளுநர் நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய தேவைகளுக்கேற்ப தொழில்நுட்ப உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் கட்டட மேம்பாட்டு தேவைகளைவும் அவர் சுட்டிக்காட்டினார். கொய்கா திட்டம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலும் இவற்றை கவனத்தில் கொள்ளுவதாக தூதுவர் உறுதியளித்தார்.
கொரியா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகளவில் முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டதோடு, வடக்கு மாகாண இளையோருக்கான தொழில்துறை வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கான முதலீடுகளை ஊக்குவிக்குமாறு அவர் கோரினார். மேலும், கொரிய மொழிப் பயிற்சி மையம் அல்லது மொழிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதற்கான உதவியையும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொரியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பச்சை வீட்டு (Greenhouse) விவசாயம் மற்றும் நுண்ணறிவு பாசன முறைகள் (Smart Irrigation) பற்றியும் ஆளுநர் கூறி, வடக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தைத் தெரிவுசெய்து இத்திட்டங்களைப் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பைத் தூதுவரிடம் கோரினார்.
வடக்கு மாகாண விவசாயிகள் கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், பாரம்பரிய முறைகளால் உற்பத்தி செலவு அதிகரித்து விளைச்சல் குறைந்து வருவதாக அவர் எடுத்துக்காட்டினார். இத்திட்டங்கள் அறிமுகமானால் குறைந்த செலவில் அதிக உற்பத்தி பெற முடியும் என ஆளுநர் வலியுறுத்தியதுடன், இதனைத் தூதுவர் ஆராய்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




