Saturday, April 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள்!

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள்!

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04.04.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு தற்போது அதிகளவு முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கான ஒழுங்குகளைச் செய்துகொடுக்கின்றோம். அரசாங்கமும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இந்தக் காலத்திலேயே முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்,

எமது இளையோருக்கு வேலைவாய்ப்பு பிரச்சினையாகவுள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பன எமது அபிவிருத்திக்கு தடையாகவுள்ளன, என்று ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் முதலீட்டுச் சபையின் தலைவர் தனது உரையில்,

இவ்வாறான கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தியமைக்காக ஆளுநருக்கு நன்றிகளைக் கூறுகின்றோம். முதலீடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சியை வரவேற்கின்றோம். எவ்வளவு விரைவாக வடக்கின் மூன்று முதலீட்டு வலயங்களுக்குமான பணிகளை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்வதற்கே விரும்புகின்றோம். அடையாளப்படுத்தப்பட்ட மூன்று முதலீட்டு வலயங்களையும் நாங்கள் பார்வையிட்டுள்ளோம், என்றார்.

காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய முதலீட்டு வலயத்துக்கான போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் தொடர்பாக தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.

இதனை முன்னெடுப்பதிலுள்ள உடனடிச் சவால்கள் இனங்காணப்பட்டு அவற்றுக்கு தீர்வுகளும் கண்டறியப்பட்டன.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் அதற்கான புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை புனரமைத்து மீளமைப்பதுடன் அதனை காங்கேசன்துறை துறைமுகம் வரையில் விரிவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பரந்தனுக்கு அண்மையாக புகையிரத நிலையம், ஏ–9 பிரதான வீதி உள்ளமை சாதகமாக அம்சம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் சில இடங்களில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

மாங்குளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி வனவளத் திணைக்களத்துக்குரியது என்பதால் அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மூன்று முதலீட்டு வலயங்களைச் சுற்றியும் வேலிகளை அமைத்து அதனை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் சுற்றுச்சூழல் நேயமிக்கதாக அமையும் என முதலீட்டுச் சபையினர் குறிப்பிட்டனர்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், கடந்த காலங்களிலும் பல சந்திப்புக்கள் நடைபெற்றாலும் அடுத்த கட்டத்துக்கு அவை நகர்ந்திருக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் உள்ளூர் அதிகாரிகள் தமது முதலீட்டு முயற்சிக்கான போதிய ஒத்துழைப்புக்களை வழங்கமறுக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினர்.

தற்போது ஆரம்பித்துள்ள தமது முயற்சியில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நடைபெறாது என்றும், இந்த மூன்று முதலீட்டு வலயங்களும் நிச்சயம் இயங்கும் எனவும் முதலீட்டுச் சபையின் தலைவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular