2026ம் ஆண்டு வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி தெற்கு வலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாணக் கல்வித்திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த முறையற்ற விதமாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடணடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (2025.10.24) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான பின்வரும் நியாயப்பாடுகளை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர்.
1. போர் நிகழ்ந்த சூழலில் தங்கள் உயிர்களை துச்சமென எண்ணி பதுங்கு குழிகளுக்குள்ளும் குண்டுமழை நடுவினிலும் நின்று கடந்த காலங்களில் பணியாற்றிய பல ஆசிரியர்களின் பெயர்களும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை.
2. போர்ச்சூழலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களதும், உடல் உறுப்புக்களை இழந்து அடைந்தவர்களதும் பெயர்களும் இப்பட்டியலில் விழுப்புண் உள்வாங்கப்பட்டுள்ளமை.
3. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தும் போர் காரணமாக மிக சவால்களின் மத்தியில் உயர்கல்வியை நிறைவுசெய்து காலதாமதமாகி ஆசியர்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று பாரிய குடும்பச் சுமைகளோடு பணியாற்றிவருகின்ற ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
4. கிளிநொச்சி மாவட்டத்தின் புவிசார் கட்டமைப்புகளை புரிந்து கொள்ளாமல் மாவட்டத்திற்குள்ளே பல கிலோமீற்றர் தூரம் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளைச் சந்தித்து பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
5. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யாத சூழலில் பற்றாக்குறையாகவுள்ள எமது மாவட்டத்தின் ஆசிரியவளத்தை சிதைக்கும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
6. முறையான தரவுகளின்றி இடமாற்றப்பட்டியலில் ஆசிரியர்களின் பெயர் உள்வாங்கப்பட்டமை மற்றும் இடமாற்றம் வழங்கப்படும் ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்களை வழங்குவது தொடர்பாக நம்பகமான பொறிமுறை ஏதுமின்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நியாயப்பாடுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றத்தால் எமது மாவட்டத்தின் கல்வி மேலும் பின்தள்ளப்பட்டு எமது மாணவர்களின் எதிர்காலம் இருள்மயமாகி பேராபத்து நிகழவுள்ளமையினை புரிந்து கொண்டு உடனடியாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தை இரத்துச்செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
கோரிக்கையின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோரும் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




