Wednesday, July 16, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அதிரடி உத்தரவு!

வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அதிரடி உத்தரவு!

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன. அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் உள்ளன. வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களை இன்னும் ஒரு மாத காலத்தினுள் வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (15.07.2025) நடைபெற்றது.

ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை இன்று புதன்கிழமையுடன் (16.07.2025) அவர்களை விடுவித்து புதிய நிலையங்களில் பொறுப்பேற்க பணிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அவர்கள் புதிய நிலையங்களில் அறிக்கையிடவில்லையாயின் நிறுவன நடைமுறைகளுக்கு அமைவான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறும் பணித்தார்.

மேலும், பாடசாலைகளில் நடைபெறும் தவணைப் பரீட்சைக்கான கட்டணங்களை மாணவர்களிடமிருந்து அறவிடுவதில்லை எனவும், அதற்குரிய நிதி மாகாண சபையால் வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் தெரிவித்தார். பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கு கொடுப்பனவு வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கியுள்ள நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது. கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் முன்னிலையில் இருந்தாலும், சாதாரண தரப் பரீட்சையில் முன்னேற்றத்தைக் காண்பிக்க முடியாமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு புறக்காரணிகளால் அவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்றும், மாணவர்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல் அவசியம் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம், ஆசிரியர்களிடமிருந்து உணர்வுபூர்மான கற்பித்தல் செயற்பாடுகள் இன்னமும் அதிகமாகத் தேவை எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம், கலாசார அலுவல்கள் பிரிவு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular