வடமேல் மாகாண பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
வடமேல் மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட அரச தொழில் நியமனங்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம்பெறத் தவறியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்தச் சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயது எல்லையை முப்பத்தி ஐந்தில் இருந்து நாற்பது வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு தான் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வடமேல் மாகாண பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்
இந்தச் சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சிந்தக மாயாதுன்னே எம்.பி., வடமேல் மாகாண பிரதம அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.