வரலாற்றில் முதல் தடவையாக லங்கா சீனிக் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பு……
லங்கா சீனி நிறுவனத்தின் பழுப்பு சீனி விற்பனை வலையமைப்பு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (11) நுகேகொடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் லங்கா சீனி நிறுவனம் தமது பெல்வத்தை மற்றும் செவனகல தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர் தர பழுப்பு சீனியை குறைந்த விலையில் இலங்கை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் வரலாற்றில் முதல் தடவையாக தமது விற்பனை வலையமைப்புகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட லங்கா சீனி நிறுவனம் 14 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு தமது விற்பனை வலைமைப்பை ஆரம்பித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடந்த காலங்களில் பெல்வத்தை மற்றும் செவனகல தொழிற்சாலைகளுக்கான லங்கா சீனி நிறுவனம் மூடப்பட்டு, தனியார் துறைக்கு விற்பனை செய்யும் திட்டம் காணப்படுவதாக பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பொய்ப் பிரச்சாரங்களுக்காக சரியான நேரத்தில் லங்கா சீனிக் கம்பனி 14 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு விற்பனை வலையமைப்பை ஆரம்பித்து விசேட ஒரு மைல்கல்லை எட்டியதற்காக லங்கா சீனி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு நிலையான பாதையில் நுழைந்துள்ள லங்கா சீனி நிறுவனத்தை ஜனவரி 1 முதல் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளிலிருந்து விலக்களிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆரம்பிக்கப்பட்ட லங்கா சீனி நிறுவனத்தின் பழுப்பு சீனி விற்பனை வலையமைப்பு, நுகர்வோர் உயர்தரமான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழுப்பு சீனியைக் குறைந்த விலையில் பெற உதவும், மேலும் 250,000 கரும்பு விவசாயக் குடும்பங்களை வலுப்படுத்தவும் வாய்ப்பளிக்கும்.
நுகேகொடை, நாவல வீதியில் அமைந்துள்ள அதன் பழுப்பு சீனி மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையம் மூலம் கரும்பு பானங்கள், வெல்லம், கரும்புத் தேன் போன்ற பல்வகைப்பட்ட தயாரிப்பு வகைகளை நுகர்வோருக்கு வழங்கவும் லங்கா சீனிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வர்த்தகம், வாணிபத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிராந்திய அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் சந்தமாலி சந்திரஸ்கர மற்றும் லங்கா சீனி நிறுவனத்தின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.




