- வலை வீசும் கைகளில் கடத்தலா? சட்டவிரோத மீன்பிடிக்கு வருகிறது புதிய சட்டம்: எம்.பி. அஜித் கிஹான் விடுத்துள்ள எச்சரிக்கை!
- 10 இலட்சம் ரூபா அபராதம், 2 வருட சிறை: சட்டவிரோத கடத்தலில் ஈடுபடும் மீனவர்களுக்கு காத்திருக்கும் கடும் தண்டனை!
- ரூ. 18 மில்லியன் பெறுமதியான ஜி.பி.எஸ் (GPS) கருவிகள் வழங்கி வைப்பு: கடத்தல்காரர்களாக மாறும் மீனவர்களைக் காக்க அரசு அதிரடி நடவடிக்கை!
ஜுட் சமந்த
கடல் அலைகளுடன் போராடி நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் மீனவர்களின் தொழிலுக்குள், ஒருசிலரால் படிந்துள்ள “கடத்தல்காரர்கள்” என்ற கரும்புள்ளியை துடைத்தெறிய புதிய சட்டம் வரவுள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சினால் 50% மானிய அடிப்படையில் மீனவர்களுக்காக 18 மில்லியன் ரூபா பெறுமதியான 250 அதிநவீன ஜி.பி.எஸ் (GPS) கருவிகளை வழங்கும் நிகழ்வு சிலாபத்தில் அமைந்துள்ள வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இந்தக் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார்.
கடலில் தற்போது மீன் வளம் வெகுவாகக் குறைந்து காணப்படுவதோடு, தற்போதைய சீரற்ற காலநிலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது உண்மை எனச் சுட்டிக்காட்டிய அவர், துரதிர்ஷ்டவசமாக இந்த பொருளாதார நெருக்கடியை ஒருசிலர் தவறான வழியில் பயன்படுத்த முற்படுவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, கல்பிட்டி முதல் சிலாபம் வரையான கடல் எல்லையூடாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவரும் கடத்தல் வலைப்பின்னலில் சிலர் சிக்குண்டுள்ளனர். கேரளா கஞ்சா, பீடி இலைகள், விவசாய கிருமிநாசினிகள், அழகுசாதனப் பொருட்கள் மாத்திரமன்றி, மனித உயிர்களைக் கொல்லும் போதை மாத்திரைகள் வரை கடல்வழியாகக் கடத்தப்படுவதாகப் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் காலம் காலமாக மீனவ சமூகம் அனுபவித்து வந்த தொழில் கௌரவம் தற்போது பொதுமக்களின் மத்தியில் கேள்விக்குறியாகி வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.
இந்த அவப்பெயரை மாற்றியமைத்து ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவே அரசும் மாகாண சபையும் பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றது எனக் குறிப்பிட்ட அஜித் கிஹான், ஒருசிலர் செய்யும் பிழைகளுக்காக முழு மீனவ சமூகமும் பழிசுமக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் மீன்பிடிச் சட்டத்தில் வரவுள்ள கடுமையான திருத்தங்கள் குறித்து மீனவர்களுக்கு இறுதிக் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், கடத்தல் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது நிரூபிக்கப்படும் எந்தவொரு மீனவருக்கும் மன்னிப்பு கிடையாது. அவர்களின் அனைத்து மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக அரசுடமையாக்கப்படும். அத்துடன், 10 இலட்சம் ரூபா அபராதமும் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் கட்டாயமாக வழங்கப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
எனவே, குறுகிய கால இலாபங்களுக்காக சட்டவிரோதப் பாதையைத் தேர்ந்தெடுக்காது, தமது தொழில் சுயமரியாதையையும் கௌரவத்தையும் பாதுகாத்து கடற்றொழிலை முன்னெடுக்குமாறு அவர் மீனவர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் வடமேல் மாகாண மீன்பிடி பணிப்பாளர் சுராஜ் சிரிசேன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



