வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளராக நீண்ட காலம் கடமையாற்றி அண்மையில் இறையடி சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் CM அஸீஸ் (லவ்லி) அவர்களின் 40ஆம் நாள் கதமுள் குர்ஆன் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு நேற்று 08.10.2025 வவுனியா நகர பள்ளிவாசலில் இடம்பெற்றது.
வவுனியா நகர வர்த்தகர்கள் சிலரின் முழு முயற்சியிலும் நிதி பங்களிப்புடனும் இடம்பெற்ற குறித்த நிகழ்வு, வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாக சபையின் மேற்பார்வையில் நேற்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா நகர பள்ளிவாசல் ஸ்தாபிக்கப்பட்டது முதல் குறித்த பள்ளிவாசலின் நிர்வாக உறுப்பினராக தனது சேவையை ஆரம்பித்த மர்ஹூம் அல்ஹாஜ் CM அஸீஸ் (லவ்லி) அவர்கள், யுத்த காலத்தின்போது மிகவும் திறமையாகவும், ஐக்கியமாகவும் தமிழ் மக்களுடன் செயற்பட்ட காரணத்தினால், தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவராக காணப்பட்டார்.
மேலும் பள்ளிவாசல் நிர்வாக சபையில் நீண்ட காலம் செயலாளராக மிகவும் திறமையாக கடமையாற்றி பள்ளிவாசலின் வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்பை செய்திருந்ததுடன், புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமம் உருவாக பாடுபட்ட எருக்கலம்பிட்டி அபிவிருத்தி குழுவின் (EDA) உறுப்பினராகவும் இருந்து ஊருக்காக பல சேவைகளை செய்துள்ளார்.
அந்த வகையில் அவரின் சேவையை நினைவுகூர்ந்தும், அதே போல் குறித்த பள்ளிவாசலில் நிர்வாக உறுப்பினர்களாக இருந்து தற்போது இறையடி சேர்ந்த ஏனையவர்களையும் நினைவுகூர்ந்தும் கதமுள் குர்ஆன் நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், குடும்பத்தார்கள் என பெரும்திரளானவர்கள் கலந்துகொண்டதுடன், சுமார் 750 பேருக்கு இரவு நேர உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


