விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிசார் இன்றைய தினம் 31.07.2025 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் அகழ்வுப்பணி இடம்பெற்றது.

பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது, எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தினார்.
இதேவேளை அண்மையில் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் தகவலுக்கமைய நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி- 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
