சுமார் 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்திச் செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து இண்டிகோ (IndiGo) விமான சேவைக்குச் சொந்தமான 6E-1185 என்ற விமானம் மூலம் இன்று காலை 07.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் இருவர் பெண்கள், இருவர் ஆண்கள் ஆவர்.
குறித்த பெண்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதே நேரம் குறித்த ஆண்கள் தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் 20 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் 684 கிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பயணிகளும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் இன்று (29) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.


