- பயிர்களைக் காக்க விவசாயிகளின் கைகளில் துப்பாக்கிகள்: கருவகஸ்வெவவில் அதிரடி!
- குரங்கு, மயில் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு போட்ட புதுத் திட்டம்!
- 50% மானியத்தில் துப்பாக்கிகள்: வனவிலங்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ள களமிறங்கிய விவசாயிகள்!
ஜுட் சமந்த
குரங்குகள், காட்டு அணில்கள், மயில்கள் எனப் படையெடுக்கும் வனவிலங்குகளால் நாளாந்தம் வியர்வை சிந்திச் செய்த விவசாயப் பயிர்கள் பாழாவதை தடுத்து நிறுத்த விவசாயிகளின் கைகளுக்கே துப்பாக்கிகள் சென்றடைந்துள்ளன.
கருவலகஸ்வெவ பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பயிர்களை நாசப்படுத்தி வந்த விலங்குகளின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட 76 விவசாயிகளுக்கு ஏயார் ரைபிள் (Air Guns) ரகத் துப்பாக்கிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய சவாலுக்கு தீர்வாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டம் – 2026’ இன் கீழ், கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவு விவசாயிகளுக்கு 50 சதவீத அரச மானிய விலையில் இத்துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டன.
கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தரங்கிகா ஷியாமலி, கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் அருந்ததி வாசனா ஜயசுந்தர மற்றும் கருவலகஸ்வெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
துப்பாக்கிகள் வெறுமனே வழங்கப்பட்டுவிடாமல், மனித உயிருக்கோ அல்லது சட்டரீதியான விதிமுறைகளுக்கோ முரணில்லாத வகையில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விசேட விளக்கமளிக்கும் விழிப்புணர்வுப் பயிற்சியும் விவசாயிகளுக்கு இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



