ஜூட் சமந்த
வேலைக்காக சமூக ஊடக வலையமைப்புகளில் விளம்பரங்களை வெளியிட்டு இலங்கையர்களை மாலத்தீவுக்கு அனுப்பும் ஒரு மோசடி தற்போது நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவுக்கு வேலைக்காக சென்ற பலர் இந்த மோசடி செய்பவர்களிடம் சிக்கியுள்ளதாக அந்நாட்டின் உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை மாத சம்பளத்துடன் வேலைகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் மோசடி கும்பல், இதற்காக ஒரு நபரிடம் ரூ.3 லட்சத்து 50,000 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஏதோ ஒரு முறையைப் பயன்படுத்தி, இலங்கையர்களை மாலத்தீவுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு வேலை வழங்காமல் தவிக்க விட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி மாலத்தீவு அல்லது வேறு நாட்டிலிருந்து இயங்குவதாக ஊகிக்கப்படுவதாகவும், எந்த காரணத்திற்காகவும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களால் நீங்கள் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொள்கிறது.


