இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் சுடச்சுட வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தை சுருட்ட முயன்ற பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வளாகத்திலேயே அம்பலமாகியுள்ளது. அரச காரியாலயத்தின் உள்ளேயே வைத்து அதிகாரிகளைப் போல நடித்து மக்களை ஏமாற்றி வந்த இருவரையே பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
புத்தள மற்றும் பெலியத்த பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால், புத்தளையைச் சேர்ந்த சந்தேகநபர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பதாகும்! இவர்கள் இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் வேலை தேடுபவர்களின் விபரங்களைச் சேகரித்து, அவர்களைத் தொடர்புகொண்டு இந்த மோசடி வலையை விரித்துள்ளனர்.
பாதிக்கப்படுபவர்களுக்குச் சந்தேகம் வராதிருக்க, அவர்களை நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கே வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அரச அலுவலகத்தின் உள்ளேயே வைத்துப் பேசுவதால், மக்கள் இதனை முழுமையாக நம்பி ஏமாந்துள்ளனர். ஆனால், இந்த நாடகத்தின் பின்னணியில் பெண் ஒருவர் முழு மோசடியையும் இயக்கியுள்ளமை தற்போதைய விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெளியுறவு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு கிடைத்த அதிரடி இரகசியத் தகவலையடுத்தே புலனாய்வு அதிகாரிகள் களத்தில் இறங்கினர். பணியகத்தின் முதலாம் மாடியில் வைத்து சந்தேகநபர்களை சுற்றிவளைத்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த 7 கடவுச்சீட்டுகள் (Passports) மற்றும் போலியான இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தப் பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். போலி ஏஜென்ட்களின் மாய வார்த்தைகளை நம்பி வெளிநாட்டு விசாக்களுக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களுக்குக் காரசார எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


