யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (25) மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் என்றும் கூறியே போராட்டகளத்தில் இருந்து சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை செம்மணியில் இடம்பெறும் அனையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக கிளிநொச்சி வர்த்தகர்கள் கதவடைப்பை மேற்கொண்டுள்ளனர். உணவங்கள், மருந்தகங்கள், வங்கிகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

