டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் நாடு பூராகவும் பாரிய இழப்புகளும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குற்பட்ட 73ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 2லட்சத்து 71ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 27 மரணங்கள் சம்பவித்துள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 44 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 735 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 10ஆயிரத்து 558 குடும்பங்களைச் சேர்ந்த 40ஆயிரத்து 821 பேர் இடைத்தங்கல் நிலையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெள்ள அனர்த்தத்தில் புத்தளம் மாவட்டத்திலே அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 68,857 குடும்பங்களும், கம்பகா மாவட்டத்தில் 53,473 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 37,569 குடும்பங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 22,594 குடும்பங்களும் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கண்டி மாவட்டத்திலே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 88 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 83 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 52 மரணங்களும், புத்தளம் மாவட்டத்தில் 27 மரணங்களும் அதிகளவாக பதிவாகியுள்ளதுடன், அனர்த்தத்தில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 410ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 336 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



