நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் நாகவில்லு கிராமமும் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
புத்தளம் நாகவில்லு கிராமத்தில் சுமார் 1500இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் 1000இற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமம், சுமார் 4 நாட்கள் சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாறியிருந்தது.
கடுமையான வெள்ள அனர்த்தத்தினால் சிக்கித்தவித்த சுமார் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள், பள்ளிவாசல்களிலும், பாடசாலையிலும் மற்றும் அயலவர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
அடிப்படை வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, பசி பட்டினியுடன் தவித்த ஊர் மக்களுக்கு இன்றுவரை சமைத்த உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை உறுப்பினருமான ஜனாப் லரீப் காசிம் அவர்களின் நெறிப்படுத்தலிலும், வழிகாட்டுதலிலும், வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராம மக்களுக்கான மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மின்சார துண்டிப்பினால் குடிப்பதற்கு குடி நீர் இன்றி தவித்த மக்களுக்கு இரண்டு தினங்களாக இலவச குடிநீர் விநியோகமும் இதன் ஒரு முக்கிய அங்கமாக இடம்பற்றது.
அரசாங்கத்தினால் குறிப்பிட்ட ஒரு தொகை நிவாரண உதவியாக கிடைக்கப்பெற்ற போதிலும், ஊர் தனவந்தர்கள், அபிமானிகளின் பூரண நிதி உதவியினால் இன்றுவரை ஊறவர்களுக்கான நிவாரண உதவிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை நாகவில்லு கிராமத்தில் பள்ளிவாசல் வளாகத்தில் காணப்பட்ட பழமையான புளிய மரம் ஒன்றும் புயலின் தாக்கத்தினால் பள்ளிவாசல் சுவரை உடைத்துக்கொண்டு, பாடசாலை வீதியை குறுக்கறுத்து பாடசாலை கூரையின் மேல் விழுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிய சிரமத்திற்கு மத்தியில் குறித்த மரம் வெட்டப்பட்டு ஊரவர்கள் முயற்சியால் அகற்றப்பட்டதுடன், ஊரின் முக்கிய குறுக்கு வீதிகளும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருந்தன.
எனவே அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமத்தின் முக்கிய குறுக்கு வீதிகளும் இன்றைய தினம் செப்பனிடப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வெள்ள அனர்த்தத்தின்போது கட்சி வேறுபாடின்றி, சகல மக்களும் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை தயக்கமின்றி, நேரகாலம் பாராமல், பாரபட்சமின்றி வழங்கி இருந்தமை அனைவறினாலும் போற்றப்பட்டு வருகின்றது.
இதற்காக சகல வழிகளிலும் தியாகம் செய்த அனைவருக்கும் இறைவனின் உயர்வான பாக்கியங்கள் கிடைக்க எமது ஊடகம் சார்பாக பிரார்த்திக்கிறோம்.















