உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2,433 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய 78,725 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் 76,292 பேர் தங்கள் அறிக்கைகளை உரிய தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இருப்பினும், 2,433 பேர் உரிய காலக்கெடுவிற்குள் இவற்றை சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து, அவர்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் மீது வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.