கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேவேளை மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
மாத்தளை மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், மத்திய மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் சமிலா அதபத்துவின் தலைமையில் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (23) மாத்தளை மாநகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
வாக்களிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து, மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
உள்ளூராட்சி சட்டத்தை மீறி பதவி வகிக்க தகுதியற்ற பெண் உறுப்பினருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு வௌியேறியதாகவும், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் சபையிலிருந்து வௌிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 10 உறுப்பினர்களை வென்றிருந்தது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினரையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 உறுப்பினரையும், சர்வஜன பலய 1 உறுப்பினரையும், ஐக்கிய தேசியக் கூட்டணி 1 உறுப்பினரையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
