ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2015 ஆம் ஆண்டில் குறித்த கூட்டுத்தாபனத்திற்குப் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மீறி, தேவையில்லாத நிலையில் 50 தற்காலிக களஞ்சியசாலைகளை (கொட்டகைகள்) இறக்குமதி செய்ததன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியதாகவும், அத்துடன் அதே மதிப்புள்ள நன்மையை வெளித்தரப்பினருக்கு வழங்கியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவரைக் கைது செய்திருந்தது.


 
 
 
