ஹூதா லங்கா (Hudha Lanka) நிறுவனத்தின் விசேட அழைப்பினை ஏற்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (17) புத்தளம், கனமூலை பிரதேசத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையிலும் இந்த விஜயம் அமைந்திருந்தது.
இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, கனமூலை பிரதேசத்தில் வாழும் சுமார் 150 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிகர் தனது கரங்களால் இந்த நிவாரணப் பொருட்களை மக்களிடம் கையளித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த உதவி தமக்கு பெரும் பக்கபலமாக அமைந்ததாகப் பயனடைந்த மக்கள் நன்றியுடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கனமூலை பாடசாலையின் கல்வித் தரம் மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பாடசாலைக்கு அவசியமான பௌதீக வளங்கள் மற்றும் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பாடசாலை அதிபர் பீ.எம். முஹ்ஸி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்தியத் தூதரகத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் ஹூதா லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், ஊர் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த விஜயமானது கனமூலை கிராம மக்களின் நீண்டகாலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.




